அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தரைத்தளத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பிரிவு அமைந்துள்ளது. இப்பிரிவில் 2300 பார்வை மாற்றுத்திறன் வாசகர்கள் தங்களை பதிவு செய்து சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
வளங்கள்:
பாடவாரியாக 2400 தொட்டு உணரக்கூடிய புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒலிப்புத்தகங்கள், தகவல் வளங்கள் பயன்பாட்டிற்காக கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. பார்வை மாற்றுத்திறன் வாசகர்கள் அவர்களே கணினியை அணுகி பயன்படுத்தவும், ஒலிப் புத்தகங்களை கேட்கவும் சிறப்பு வாய்ந்த ஒலி மென்பொருள் கருவிகள் நிறுவப்பெற்ற கணினிகள், மொபைல் டேப்லெட்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழ், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உரையை பிரெய்லி உரையாக மாற்றும் மென்பொருள் கருவிகள் இந்தப் பிரிவில் பயன்பாட்டில் உள்ளன.
சேவைகள்:
போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக நடப்புநிகழ்வுகள் தொகுக்கப்பட்டு ஒலிவடிவில் பதிவு செய்யப்பட்டு வாசகர்கள் கேட்டுப் பயன்பெறும் வகையில் கணினிகளில் நிறுவப்படுகின்றன. இவை அனைத்து வாசகர்களுக்கும் மின்னஞ்சல் வழியாகவும் பகிரப்படுகிறது. வாசகர்களின் கோரிக்கையின் அடிப்படையில் முக்கியப் பாடங்கள் தொட்டுணரக்கூடிய புத்தக வடிவிலும் ஒலிப்புத்தகமாகவும் மாற்றித் தரப்படுகிறது.
போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு தேர்வுகள் குறித்த தகவல்கள் தெரிவித்தல், மாநில-ஒன்றிய அரசுத் தேர்வுகளுக்காக இணைய வழியாக விண்ணப்பிக்க உதவுதல், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்து அச்சிட்டுத்தறுதல், தேர்வு எழுத்தர்கள் ஏற்பாடு செய்தல் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.
தன்னார்வலர்கள் மூலம் பாடங்களை படித்துக்காட்டுவது, அவற்றை ஒலி வடிவில் பதிவு செய்தல், வேலைவாய்ப்பு ஆலோசனைகள், தொழில் வழிகாட்டும் சேவைகளும் வழங்கப்படுகின்றன. மாதம்தோறும் பிரெய்லி பிரிவு வாசகர்களுக்கு கல்வி, தேர்வு, தொழில்நுட்பம், உடல்நலம், மனநலம், தொழில் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள், உரைகள் சிறப்பு அழைப்பாளர்களை கொண்டு நடத்தப்படுகின்றன.
பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இத்தகைய சேவைககளை வழங்குவதில் இந்திய அளவில் நமது அண்ணா நூற்றாண்டு நூலகம் முதன்மை நூலகமாக விளங்கி வருகிறது. இவ்வசதிகளைப் பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று மாநில, ஒன்றிய அரசு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். மாற்றுத்திறன் வாசகர்கள் மேம்பாட்டிற்காக பல்வேறு சேவைப்பணிகள் வழங்குவதில் அண்ணா நூற்றாண்டு நூலகம் பெருமை கொள்கிறது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments